எத்துணை ஆண்டுகள் சிற்சில பொழுதுகளில் உன் நினைவுகள்? தணிக்கை உண்டா என்னிடம்? கணிக்கத் தான் ஆகுமா? முன்னிரவு பொழுதுகளில், தொலைக்காட்சி வெளிச்சத்தில் நகக்கண் நோக்கும் தருணங்களில், காலைக் குளியல் தண்ணீரின் முதல் ஸ்பரிசத்தில், உலர்ந்த துவட்டியின் மொருமொருப்பில், மதிய உணவின் கடைசிப் பருக்கையில், நொய்ந்த உடலின் சோம்பல் முறிவுகளில், நினைவுகளின் தாக்கங்கள் பல. நினைத்தவுடன் அழைக்கும் தொலைவில் இருந்தும் , அழைத்தால் மட்டுமே நினைக்கும் நாட்களும், நினைத்தும் அழைக்க மறந்த நாட்களும் இன்னும் பல. அழைத்த சில நாட்களில் பேசிய சில சொற்களின் கனம் தாளாமல் நம்மிருவரின் இடையில் எழுந்த கண மௌனம் யுகங்களாய் நகர்ந்த, நகர்த்தப்பட்ட காலங்களும், அவை மறந்து, மறக்கப்பட்டு பின் நாம் பேசிய கதைகளின் அதிர்வுகளும் காற்றில் இன்னும் இருக்குமோ? இருந்தாலும் அவற்றை பதம் பிரிக்கதான் முடியுமோ?
எத்துணை இரவுகள் உன் மடியின் கதகதப்பில் உறங்கும் கனவுகள்? கனவில் கூட கனவாகவே இருந்த நினைப்புகள் அவை. "இவ்வளோ நாளுக்கப்பறமும் மடியில தூங்கும் ஆசையா?" என்று தலை கோதியவாறே நீ கேட்டது இன்றும் என் காதில்..."எனக்கு வேலை இருக்கு" என்று சலித்துக் கொண்டாலும் மடியில் சாயும் போது மறுத்ததில்லை என்றும் நீ- கனவிலும் கூட. உன் முகம் பார்க்க ஏங்கி நின்று, பின் ஏக்கம் மறந்து, முகமும், அதோடு ஏக்கமும் சேர்ந்து மறந்து போகாதோ என்று இன்னும் தவித்த நாட்களும் உண்டு. ஏக்கம் மறைந்தும் முகம் மறந்ததில்லை.
நான் வாசிக்கும் புத்தகங்களின் பொருள் அறிய ஆர்வம் அதிகம் உனக்கு. சில பொழுது, பொருள் தெரியாமல் நான் அகராதி புரட்டும் போது கேலியாய் சிரிப்பாய். சிரிப்பினூடே பொருளையும் கேட்டுத் தெரிந்து கொள்வாய். சிரிப்பின் பொருளும், புத்தகத்தின் பொருளும் அறிந்த திருப்தியில் உறங்கும் என்னை நீ பார்ப்பாயா என்று எனக்கு தெரியாது- பார்ப்பது போல் கற்பனை செய்து கொள்வேன். அந்த கற்பனையும் இனிதாய்த் தான் இருக்கும்.
உண்ணும் போது பேச்சு துணைக்கு ஒருவர் வேண்டும் என்று, தொலைபேசியை தொல்லைபேசியாக்கும் போதும், தொல்லை பொறுத்து, பேசியதையே திரும்பவும் பேசுவாய்- பல முறை உண்ணும் உணவின் மெனு'வே பேச்சாயிருக்கும். விடுப்பு எடுத்து பார்க்க வருகிறேன் என்று பல முறை சொல்லி, பின்னர் அலுவல் என்று வராமற் போகும் பொழுதும், திட்டுவாய்- பதில் சொல்லத் தெரியாமல் வாய் மூடி மௌனித்திருக்கும் அக்கணத்தின் உணர்வுகளை என்னவென்று சொல்வது?
இவை அனைத்திற்கும் இன்னும் பலவற்றிற்கும் உன்னை என்னவென்று அழைப்பது?- கீதை போல் பாதை காட்டும் உனக்கு நீயே வைத்த பெயர்- நான் என்றும் அழைக்கும் பெயர்- அம்மா!
Lovely one! :)
ReplyDelete