Pages

Thursday, November 19, 2009

கல்கியும் கதையும்!

சில தினங்களுக்கு முன், பழைய பள்ளிக்கூட சினேகிதியின் மறுஅறிமுகம் கிட்டியது. நீண்ட நாட்களுக்கு பிறகு, அதுவும் மின்னூட்டதின் வாயிலாக கிட்டிய அறிமுகம். இன்று அவள் கல்லூரியில்- படிப்பது முதுகலை மருத்துவப் பட்டம் ஆயினும், தமிழில் ஆர்வம் அதிகம். சிற்சில ஷேமலாபங்கலுக்குப் பிறகு, பேச்சு தமிழின் பக்கம் திரும்பியது. கல்கியின் "சிவகாமியின் சபதம்" பேசாமல் ஒரு தமிழ்ப் பேச்சா?- அதுகாறும் இல்லாத அவா...இணையத்தில் தேடியதில், "சிவகாமியின் சபதம்" முழுமையும் வலைப்பதிவாக- சென்னைநூலகம்.காம்'ல் கிட்டியதும், வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். நேற்று மட்டும் வாசித்ததில், முதல் பாகம்- பரஞ்சோதி யாத்திரை முடிந்தது.

கல்கியின் படைப்பில், நல்லவர் யாவரும் எப்பொழுதும் நல்லவரே..சில பொழுது, நரசிம்ம பல்லவர் மீது மரியாதையும், சில பொழுது பிரமிப்பும், சில பொழுது அச்சமும் வரும்- வெறுப்பு என்றுமே வராது. ஆனால், அவரை தொடர்பு படுத்த முடியாது- நரசிம்மரோ, ஆயனரோ, சிவகாமியோ- அவர் அனைவரும்- கதாபாத்திரங்கள்- நிஜ வாழ்க்கையில் கைக்கொள்ள முடியாத கற்பனை படைப்புகள். தவறு செய்யாத, செய்ய இயலாத மகா புருஷர்கள்- நரசிங்கரைப் போல, அல்லது கொடுமதியாளர்கள்- புலிகேசி போல [ விக்கிபீடியாவிலோ, வேறு கதை- அங்கு, புலிகேசி மன்னன் ஒரு மாவீரன் - சிவகாமியின் சபதத்திலோ, அவன் ஒரு ஈவிரக்கமற்ற கொடுங்கோலன்]. நம் உணர்ச்சிகள் ஒரு பொருட்டே அல்ல. ஆசிரியர் ஒரு கதாபாத்திரத்தை எண்ணிய விதமே, அப்பாத்திரம் அமையும்- ஐயம்மற்ற பாத்திரப்படைப்பு. அவர்களில் சாமானியர் எவரும் இலர். சிவகாமியின் சபதம் படிக்கும் எவருக்கும் மகேந்திர பல்லவன் மேல் ஒரு காதல் வருவது இயற்கை.

அன்றைய காஞ்சி மாநகரம் கதைகளில் வருவது போன்று மகோன்னதமாக இருந்திருக்குமா என்று அறியக் கூடியவர் எவரும் இலர். படைப்பாளியின் உரிமையென்றாலும், வரலாறுடன் கற்பனை கலக்கும் போது, எது கற்பனை எது நிஜம் என்று தெரியாமல் போய்விடுகிறது- சிவகாமி நிஜமா? ஆயனர் நிஜமா? சிவகாமி-மாமல்லன் காதல் நிஜமா? - நிஜமாய் இருக்கலாகாதா என்று சில பொழுது நெஞ்சம் மயங்கும். அது போன்ற சமயங்களில், ஆசிரியரின் வர்ணனைகள் நிஜத்தையும் நிழலையும் பிரித்துக் காட்டிவிடும்.வரலாற்றுத் தொடர்கள்- கல்கியோ, சாண்டில்யனோ- அவை அனைத்தும் தமிழின உணர்ச்சிகளை மையமிட்டே அமைந்தவை. மிகைப்படுத்தப்பட்ட செய்திகளும், கதாசிரியரின் கற்பனைகளும் கலந்த கலவையை பருகி வளர்ந்த தமிழர்களை என்ன செய்வது? இவை போதாதென்று, தமிழ்வெறி ஊட்டவென்றே ஒரு கூட்டம்- விஞ்ஞான விளக்கமின்றி புலவரின் புகழ்ச்சியும், கதைகளின் மிகுதியும் கையிற்கொண்டு தமிழ் வரலாறு படைக்க துடித்துக் கொண்டிருக்கின்றது. தமிழ் இனி மெல்லச் சாகும்!

1 comment:

Note: Only a member of this blog may post a comment.